ஞாயிறு, 31 ஜனவரி, 2016



அன்பு நண்பர்களுக்கு  வணக்கம் ,

                    சில காரணங்களால் என்னால் தொடர்ந்து மூன்று வருடங்களாக  புதிய இடுகைகளை இட முடிய வில்லை . அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். இனி தொடர்ந்து இயங்கி உங்களை வாரம் ஓரிரு முறையாவது  கண்டிப்பாக சந்திப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் . தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 3

மூலிகை சாப நிவர்த்தி

                  இந்த பகுதியில் சாப நிவர்த்தி மந்திரங்களை காணலாம்.

            அரிஅர  பரமேஸ்வரர் சாபம்  நசிமசி - பார்வதி சாபம்  நசிமசி -  அரிஅர சாபம்  நசிமசி - நந்தி சாபம்  நசிமசி - அகஸ்தியர் சாபம்  நசிமசி - பதிநெண்சித்தர் சாபம்  நசிமசி -  நசிமசி  மசிமசி  நசியமாக கடவ சுவாஹா " 

                        மேற்கூறிய மந்திரத்தை 15  முறை கூறி சாப நிவர்த்தி செய்ய வேண்டும் .   

                 மூலிகை சாப நிவர்த்தி இலகு முறை 

          நாடெல்லாம் சுற்றி நானுன்னை காணாமல் 
          காடெல்லாம் சுற்றி நானுன்னை கண்டேன் 
          நீயொரு சக்தி , நானொரு சிவன் ,
          நீ என் வசமாக சுவாஹா .......

                        என்று  21  முறை செபித்து மூலிகைகளின் சாபத்தை  நீக்கி  பின் உயிர் ஊட்டி எடுக்க முழுப்பலன் கிட்டும் ..

             மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தல் ....

           " ஓம்  மூலி , சர்வ மூலி , உயிர்மூலி
           உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாஹா "

என்று 15  முறை கூறி உயிர் கொடுத்து பிடுங்கவும் . இதற்கு முன் சாப நிவர்த்தி செய்ய மறக்க வேண்டாம் .  இதன் மூலம் மூலிகையின் சக்தி அதிகரிக்கும் . பொதுவாக மூலிகைகளை மார்கழி , தை , மாசி ஆகிய இலையுதிர் காலங்களில் சேகரிப்பது நல்லது .

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 2

மூலிகை சாப நிவர்த்தி வழிபாடு

                         இந்த பகுதியில் மூலிகை சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம் . ஞாயிறு , செவ்வாய், வியாழன்  ஆகிய வார நாட்களில் , குளித்து முடித்து அதி காலையில் குறிப்பிட்ட "உயர்வகை " மூலிகையின் அருகில் சென்று அங்கு நீர் தெளித்து சுத்தம் செய்து , ஒரு வெற்றிலையில் , மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து , அறுகு சூட்டி சிறிது வெல்லம் , வாழைப்பழம், தாம்பூலம் வைத்து சூடம் கொழுத்தி வணங்க வேண்டும் . பிறகு மஞ்சள் , சந்தனம் , குங்குமம் , கலந்த நீரை செடியின் மீது தெளித்து ஊது பத்தி சாம்பிராணி புகை காட்ட வேண்டும் .

                       அடுத்து ஒன்பது அங்குல நீளத்திற்கும் அதிகமான மஞ்சள் நூலில் நடுவில் மூன்று அங்குல நீளமுள்ள மஞ்சளை முடிந்து மூன்று முடி போட்டு , அதற்கு சந்தானம் பூசி, குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி கையில் வைத்து கொண்டு மூலிகைக்கருகில்  சூடன்  கொளுத்தி  வைத்து    உரிய      மந்திரத்தை         ( மூன்றாம் பாகத்தில் மந்திரம் பற்றிய விளக்கம் அளிக்கப்படும் ) ஒன்பது முறை கூறி மாங்கல்ய தாரணம் செய்வது போல் வலது புறம அமர்ந்து காப்பு கட்டவும் அதாவது மூன்று , ஐந்து அல்லது ஏழு  முடி போடவும் . ( தாலி கட்டுவது போன்றது )

                          பின்னர்   தேங்காய் உடைத்து , சூடன் கொளுத்தி   அம்மூலிகையின் நேரில் எதிர் முகமாக அமர்ந்து  , உரிய மூல மந்திரத்தை இருபத்தியொரு முறை செபித்து விநாயகரை வணங்கிய பின் அச்செடியின் அடியில் சுற்றிலும் மண்ணை கொத்தி , கண்ணில் படும் முதல் வேரை மட்டும் முனை அறுபடாமல் எடுத்த பிறகு , முழு மூலிகையும் வழக்கம் போல் பிடுங்கவும் . சில குறிப்பிட்ட வகை மூலிகை அதிகம் தேவை படுமாயின் அவ்வகையில் முன்னோடியாக ஒன்றிற்கு மட்டும் சாப நிவர்த்தி செய்து , பிறகு அவ்வினத்தில் தேவைப்படும் அனைத்தையும் எடுத்து கொள்ளலாம் என்பது மரபு ஆகும் .

புதன், 1 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 1

மூலிகை சாப நிவர்த்தி  

                         பொதுவாக நாம் கேள்வி பட்டிருப்போம் .. மூலிகை சாப நிவர்த்தி செய்து தான் எடுக்க வேண்டும்  என்று. அது என்ன - சாப நிவர்த்தி என்பது எப்படி ? அதற்கு என்ன மந்திரம் சொல்வது ? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். யாரும் சொல்ல மாட்டார்கள் ...இதோ அதை பற்றிய விளக்கங்கள் .. மூன்று பாகங்களாக...

                         பொதுவாக நமது கண்களுக்கு சாதாரணமாகவும் , அமைதியான சடப்பொருளாகவும் காட்சியளிக்கும்  தாவர வகைகள் யாவுமே , உண்மையில் அதனதன் இயற்கை தன்மைக்கேற்ப , எளிய மருத்துவ குணத்தில் இருந்து அரிய சக்தி வரை தன்னகத்தே கொண்டவை ஆகும். இவற்றின் துணையின்றி , சித்தர்கள் செப்பியுள்ள மணி , மந்திரம் , மருந்து உள்ளிட்ட எந்த ஒரு கலையினையுமே அடையவியலாது. நாம் உயிர்வாழ  உணவாக பயன்படக் கூடியவற்றுள் மிகுதியானது தாவர இனப்பொருட்களே ஆகும் .   வைத்திய , வாத , யோகா , ஞான , கல்பம் உள்ளிட்ட அனைத்து சித்திகளையும் பெற உறுதுணை புரிவது மூலிகைகளேயாகும். இவற்றிக்கு உயிர் மட்டுமல்ல. உணர்வுகளுமுண்டு . இன்றைய விஞ்ஞானமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது . 

                      நிற்க. மூலிகைகள் யாவுமே மனித குல பயனுக்காகவே படைக்க பெற்றிருபினும் கூட - அவற்றிற்கு உயிரும் உணர்வும் உண்டு என்ற அடிப்படையில் நோக்குகையில் அவற்றை நாம் கைக்கொள்ளும் முன் அவற்றின் சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும் . மூலிகைகளை நம் வசம் ஆக்கும் முன் அவற்றிற்கு "" இவனால் நமது ஆயுள் முடிகின்றதே  "" என்ற ஏக்கமும் பயமும் சினமும் ஏற்படாமலும் , நம்மை நாடி யாசிக்கும் இவனுக்கு நமக்குரிய சக்த்திகள் எல்லாம் அளித்து உதவ வேண்டியது நமது கடமை ஆகும் " என்ற நல்லெண்ணமும் ஏற்பட வேண்டியது  மிக அவசியமாகும் .  இதோடு சித்தர்களால் - உரிய பயன் அளிக்காதவாறு மூலிகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சாபமும் விலக்கபடவேண்டும் . இவை அனைத்திற்கும் பொருந்தும் எனினும் - சில முக்கியமான சாதனைக்குரிய - உயர்வகை மூலிகைகளுக்காவது இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டுவது அத்தியாவசியமாகிறது . அதற்குரிய சில வழிமுறைகளையும் , சில மந்திரங்களையும் சித்தர் பெருமக்கள்  நமக்கு அருளி உள்ளார்கள். அவற்றை கடைபிடித்தலேயன்றி முழுப்பயனையும் நாம் அடையவியலாது என்பது திண்ணம் . அடுத்து வரும் பாகத்தில் சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம்

 




வெள்ளி, 27 ஜூலை, 2012

பதினான்கு வேகங்கள் - பாகம் 2

பதினான்கு வேகங்கள் :- 

     8. காசம் ( இருமல் )  9. இளைப்பு ( ஆயாசம் ) :- 

                காசம் என்ற ஈளை இருமலை அடக்கினால் ( இதற்கு இளைப்பு என்றும் பொருள் உண்டு ) - கடும் இருமல் காணும் . மூச்சு காற்றில் கெட்ட மனம் வீசும் . மேலும் இருதய நோயும் காணும் . இளைப்பை  அடக்கினால் மிக்க வெப்பம் உண்டாக்கி அதனால் நீர்மேகம் , குன்மம் , மூர்ச்சை , குளிர் முதலியன காணும் . தும்மலை அடக்குவதால் உண்டாகும் நோய்களும் கூட காணும்  .

    10 . தூக்கம் ( நித்திரை ) :- 

                 இயற்கையாய் தச வாயுவில் ஒன்றாகிய தூக்கத்தை அடக்கினால் நாள்தோறும் தலைக்கனம் , கண் சிவந்து பீழை கட்டி எரிதல் , செவிட்டு தன்மை , தெளிவற்ற சொல் , சோம்பல் முதலிய பிணிகள் வந்து சேரும் . 

    11. வாந்தி  ( சத்தி - வமனம் )

                இயற்கை மாறுபாட்டினால் ஆன  வாந்தியை தான் முயற்சியினால் அடக்கினால் - புழுக்கடியினால் காணும் தடிப்பு , குட்டம் ,  நமைச்சல் , பாண்டு , கண்நோய் , பித்த விட பாகம் , இரைப்பு சுரம் , இருமல் ஆகியன ஏற்படும் ..

     12 . விழிநீர் ( கண்ணீர் )

                 கண்ணில் இருந்து வரும் நீரை அடக்கினால் தமர வாயு , பீநசம் , கண்நோய் , தலையில் புண் மற்றும் அப்புண்ணில்  வாயு கூடினால் குன்மநோய் முதலியன காணும் . 

      13. சுக்கிலம் ( விந்து ) 

                 அபான வாயுவினால் வெளிப்படும் விந்துவை அடக்கினால் சுரம் , நீர்க்கட்டு , கை கால்கள் , கீல்கள் , இவற்றில் நோய் , விந்து கசிந்து ஆடை நனைதல் , மார்படைப்பு , வெள்ளை ஆகியன உண்டாகும் . 

      14. சுவாசம் ( மூச்சு )

              பிராண வாயுவின் செயல் ஆன சுவாசத்தை அடக்கினால் இருமல் , வயிற்று பொருமல் , சுவை அறியாமை , குலை நோய் , சுரம் , வெட்டை , முதலியவை  விளையும். 

                        

                 

வியாழன், 26 ஜூலை, 2012

பதினான்கு வேகங்கள் - பாகம் 1

பதினான்கு வேகங்கள்

    " பதினான்கு வேகப்பேர்கள் , பகிர்ந்திட அவற்றைக் கேளாய் "
    " விதித்திடும் வாதந்தும்மல் , மேவுநீர்  மலங் கொட்டாவி "
    " சுதித்திடும் பசி நீர் வேட்கை , காசமோடிளைப்பு நித்திரை "
    " மதித்திடு வாந்தி கண்ணீர் வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே "

                                              - பதினெண் சித்தர் நாடி நூல்....

          நமது உடலில் இயற்கையாய் உண்டாகும் வேகங்கள் - 14 எனவும் அவற்றை அவ்வவற்றின் விரைவில் இருந்து தடுத்து நிறுத்தியோ அடக்கி வைத்தோ விடுவதால் பல நோய்கள விளையும் என கூறப்படுகின்றது . அவற்றின் விவரங்கள் .........

1. வாதம் - ஆபான வாயு - கீல்வாய்வழி - கீழ்க்கால்
              இயற்கையாய் வெளிப்படும் அபான வாயுவை பல காரணங்களால் வெளி விடாமல் முழுதுந் தடைசெய்வதாலும் சிறிது சிறிதாக வெளி விடுவதாலும் - மார்பு நோய் - வாதகுன்மம் - குடல் வாயு - உடல்முழுதும் குத்தல் - குடைச்சல் - வல்லை - வாதம் , மலசல தடை - அதனால் பசித்தீ  மந்தம் முதலியன விளையும் ...

௨. தும்மல் 
               மூக்கில் உள்ள கிருகரனாகிய வாயுவின் தொழிலை அதாவது தும்மலை  தடுத்தால்   அவ்வாயு வேம்மயூற்றை அடைந்து இலேசாகி மேலுக்கு கிளம்பி தலை முற்றும் நோதல் - முகம் இழுத்தல - இடுப்பு வலி முதலியன ஏற்படும் ..

3. சிறு நீர் :- 
               இயற்கையான அல்லது காலமல்லாக் காலத்தில் அபானவாயுவினால் வெளிப்படும் சிறு நீரை அடக்கினால் நீரடைப்பு , நீர்த்தாரை புண்ணாதல் , ஆண்குறி சோர்வுடன் குத்தல் , கீல்கள் தோறும நோதல் , தீப்போல் எறிதல் போன்றவை தோணும் .

4. மலம் :-
              மலத்தை கீல் தள்ளும் அபானவாயுவின்  செயலை எதிர்த்து மலத்தை அடக்கினால் அந்த அபானன் பெருகி - அடக்க பெற்ற மலத்தை கீழே தள்ளும் . அவ்வாயுவின் தன்மையால் சலதொடம் , மூலங்கள் கீல் நோய் , காணும் . அவ்வாயுவே வெம்மயூற்றால் மேல் நோக்கி கிளம்பி தலையில் சேர்ந்து தலை வலித்தல் , ஒலியுடன் வாயு பிரிதல் , உடல் வன்மை குன்றல் , மற்றும் பல நோய்களும் காணும் ..

5 . கொட்டாவி :- 
              கொட்டாவி வரும் பொது அதை அடக்கினால் முகம் வாடல் , இளைப்பு குறி காணுதல் , அளவினபடி உண்டாலும் செரியாமை , நீர்நாய் , வெள்ளை நோய் இவற்றால் அறிவு மயங்கல் , வயிற்றில் பிணி வருதல்  முதலியனவும் , மேலும் தும்மலை அடக்கினால் உண்டாகும் நோய்களும் வரும் .

6 , 7 . பசி மற்றும் தாகம் :-
               காலத்தில் உண்ணாமலும் , குடிக்காமலும் பசி - நீர் வேட்கை அடக்கினால் உடலும் , உடல் உறுப்புகளும் தத்தம் வேலைகளை செய்யாது ,. அதனால் சூளை , பிரமை , உடல் இளைப்பு , உடல் வாட்டம் ,பல நாள் உணவின்றி இருந்தால் மூல சூடு கண்டு , தாதுக்கள் வற்றி அதனால் சயம் எனப்படும் இளைப்பு நோய் ஏற்ப்படும் .

         
               

   




செவ்வாய், 24 ஜூலை, 2012

சில சித்தர்களின் பெயர்கள் - 2

 சில  சித்தர்களின் பெயர்கள் - 2

                     இந்த பகுதியில் மேலும் சில சித்தர்களின் பெயர்களை பார்ப்போம் .

                     குருபர முனி , குருராஜர் , குண்டலி சித்தர் , குபேரசுந்தரர் , கூர்மானந்தர் , கூனக்கண்ணர் , கெம்புரிசி , கெவுன குளிகை சித்தர் , கையாட்டி சித்தர் , கௌசிகர் , சனகர் , சதுரகிரிசித்தர் , சங்க முனி , சங்கரர் , சங்கிலி சித்தர் , சம்புமாமுனி , சச்சிதானந்தர் , சதாசிவ முனி , சவர்க்காரமுனி , சமையநாதர் , சந்திர நாதர் , சங்கமுனி , சத்தரிசி , சமாதி சித்தர் , சவுனக முனி , சாந்த மகரிஷி , சாங்கிய மகரிஷி , சிவன் , சிவநேச சித்தர் , சிக்கிந்தாரிஷி , சிவத்தீஸ்வரர்  சிபி சித்தர் , சிவப்ரகாச ரிஷி , சிவனேந்திர முனி , சிவபிரம்ம ரிஷி , சித்தானந்தர் , சுந்தரர் , சுகபிரம்மரிஷி , சுகாதார சித்தர் , சுழிமுனைசித்தர் , சுவர்க்க மகா ரிஷி , சிவத்தியா முனி , சூதன மாமுனி , சூரியானந்தர் ........

தொடரும் .............

திங்கள், 23 ஜூலை, 2012

சில சித்தர்களின் பெயர்கள் - 1

சில  சித்தர்களின் பெயர்கள் :- 

                          சித்தர்களை பற்றியும் அவர்களின்  பராக்கிரமங்கள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும் . பதினெட்டு சித்தர்கள் தவிர மேலும் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் . அவர்களில் சிலரின் பெயர்களை நாம் தெரிந்து கொள்வோமா ..

அம்பிகானந்தர் , அசமாருதமகரிசி , அழகுதேவன் , அகிலாண்ட சித்தர் , ,அமிர்தசித்தர்  , அவத்தியமாமுனி , அருள்சித்தர் , அடவிசித்தர் , அணிமாதிசித்தர் அழகானந்தர் , அத்திரி ,மகரிசி  ,அலுகன்னிசித்தர், அசுவினிதேவர், அல்லமாப்ரபு, அமுதமகரிசி, ஆராதாரசித்தர்  ஆகாயகெவுனசித்தர் ,இராமரிஷி ,இராமானந்தர்  ,இமயகிரிசித்தர் , உதரகிரிசித்தர் , உலுகமாமுனி , உமையாள்  , ஒளவையார் ,  கணபதி , கணநாதர் , கபிலர் , கடைப்பிள்ளை ,கலைகோட்டுமுனி  , ,கல்லுளிசித்தர்  , கஞ்சமலை சித்தர் , கதண்டுமாமுனி , கன்னி சித்தர் , கன்னானந்தர் கலியுகரிசி , கடுவெளிசித்தர் , , கபாடசித்தர் , கடக்பனாதர் , கச்சியப்பமுனி கர்கமாமுனி ,  கம்பளினாதர் கலிங்க , நாதர் கநையாழி சித்தர் , கங்காலமாமுனி  , கண்ணுவ மகரிஷி ,  கருப்பமுனி , கபாலமுனி ,காகபுஜண்டர்  ,காலமகாரிசி  , காலாட்டி சித்தர் ,  காயசித்தி நாதர் , காலங்கி நாதர் , காங்கேயமுனி  காஞ்சனமுனி, காலிங்க மகாரிஷி , ,காசிவிஸ்வநாதர்  .......

தொடரும் ......

ஞாயிறு, 22 ஜூலை, 2012

சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்

                      சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்:-

                      சித்தர்களின்  கொள்கை படி ஈசனை { உயிரை } வணங்குவது - சிவ பூசை எனவும் , ஈசுவரியை ( வலிமையை ) வணங்குவது - சக்தி பூசை எனவும் , இருவரையும் ஒருங்கே  வணங்குவது சிவசக்தி பூசை எனவும் கூறப்படும் .  உலகின் அனைத்து தோற்றத்திற்கும் , இயக்கத்திற்கும் ஆதாரமாக  உள்ளது  விந்து - நாதமே என்ற தத்துவத்த்டை குறிப்பதற்கு ஆண் பெண் குறிகளின் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இலிங்கம் கல்லினால் குழவியை போல் செய்து மேற்பக்கம் உருண்டயாகவும் அடிப்பக்கம் யோநி என்ற பீடத்தில் பொருந்தியதாகவும் இருக்கும். எனவே இலிங்க பூசையிலே சக்தி பூசையும் அடங்கியுள்ளது . ஆண் பெண் இரண்டையும் குறிப்பதால் இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும் . பஞ்ச பூதங்களையும் குறிக்க கூடிய லிங்கமானது ஆதார - பிராண - சிவ - மூல - பார்த்திவ - பாதாள - ஆவடையார் லிங்கங்கள் என பலவகையாக கொள்ளப்படும் . ஆயினும் ஆகம விதிப்படி ஐவகையாக மட்டுமே கொள்ளப்படும் . அவையாவன :- 

1.  பெண்லிங்கம்  :-  இது இருபாலரின் குறியும் இணைந்துள்ளதால் இது  பொது வழிபாட்டுக்குரியது . இது முதல் நிலையாகிய சரியை க்கும் உடையது .

2. பூலிங்கம் :- இது ஆண் லிங்கமாகும் . இது உண்மை , சக்தியை கண்டறிய உதவும் லிங்கமாகும். இது இரண்டாவது நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது

3.  நபும்சக லிங்கம் :- இது இரண்டிலும் சேராதது . இருண்ட நாடு நிலையான , மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையில் உள்ள வழிபாடாகும் . 

4.  பரம லிங்கம் :- இதுமிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும் .  இது மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது . 

5.  மகா லிங்கம் :- இது அறிவு ஒளியானது . இது பிறப்பை மறுத்து பரம்பொருளை  அடைவதற்கு உரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது .

                                    இவ்வகை லிங்கங்களையும் , பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பிரித்து பிருத்விலிங்கம் காஞ்சிபுரத்திலும் , அப்பு லிங்கம் - சம்புகேச்வரம் , திருவானைக்காவலிலும்  , தேயு லிங்கம் - திருவண்ணாமலையிலும் , வாயு லிங்கம் - காளத்தியிலும் , ஆகாய லிங்கம் - சிதம்பரத்திலும் நிர்மாணிக்க பட்டுள்ளது .
                                 இவ்வகை வழிபாடு யாவுமே சிவ-சக்தியின் வலிமையை உலகத்திற்கு உணர்த்துவதற்கும் , மேல் நிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கபட்டவையே தவிர வேறில்லை . விநாயகர் வடிவ அமைப்பிலும் , ஓம் என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமம் இதுவன்றி வேறொன்றுமில்லை .

                    

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நாடியின் எண்ணிக்கையும் - பார்ப்பதற்கான காலமும்


                    நாடித்துடிப்ப்பின் எண்ணிக்கை வயதுக்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு நிமிடத்திற்கு பிறந்த குழந்தைக்கு  - 140  ; குழந்தைகட்கு - 100  ; பால பருவத்தில் 120  - 130  ; வாலிபத்தில் - 90 ; முழு பருவ ஆணுக்கு 70  முதல் - 90  வரை ; முழு பருவ பெண்ணுக்கு 75  முதல் - 80  வரை : தளர்ந்த பருவத்தில் 80  ; வயதான பிறகு 75  ஆகிய தடவைகளும் மற்றும் அமர்ந்திருப்பின் 40  ; நின்றால் 75  ; படுக்கையில் 67  தடவையும் வீதம் சாதாரணமாக நாடி துடிக்கும் . இதில் கோதுமையின் அளவுள்ள ஒரு மாத்திரை அளவில் வாத நாடியும் , அரை மாத்திரை அளவில் பித்த நாடியும் , மேற்படி கால் மாத்திரை அளவில் கப நாடியும் நடந்தால் நலமாகும் . இதில் மாறுதல் காணின் பிணி பற்றும் என்பதை அறியலாம் . 

                        நாடித்துடிப்பை சித்திரை - வைகாசி மாதத்தில் - உதயத்திலும் . ஆணி - ஆடி - ஐப்பசி - கார்த்திக்கையில் மதியத்திலும் - பங்குனி - ஆவணி - புரட்டாசியில் இரவிலும் முறையே தெளிவாக அறியலாம் . மேலும் காலை மணி ஆறு முதல் - பத்து வரை வாதமும் , பத்து மணி முதல் - இரண்டு மணி வரை பித்தமும் , மாலை இரண்டு முதல் - ஆறு வரை கபமும் , மிகவும் எழுச்சியுடன் இருக்கும் ஆகவே அந்தந்த வேளையில் அவ்வவற்றை  கண்டறிதல் சுலபமாகும் . இங்ஙனமே மாலை ஆறு முதல் காலை ஆறு வரை உள்ள இரவு நேரத்திற்கும் கிரமப்படி கண்டறிதல் வேண்டும் .


ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நாடி பார்க்கும் முறை :-

  நாடித்  துடிப்பு எப்படி ஏற்படுகின்றது ?

                              நமது இருதயத்தின் இடது சடரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு  கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும் . மீண்டும் இடது சடரம் விரியும் பொழுது  குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும் . இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனை சேர்ந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாக இயங்கி , இருதய நடையின் மாறுதல்களை தெரிவிக்கின்றது . இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடு அடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகின்றது . 

                            நாடித்துடிப்பினை  தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் , கைகளில் அறிவதே நலமாகும் . எனவே ஆண்களுக்கு வலது கரத்திலும் , பெண்களுக்கு இடது கரத்திலுமாக -- முன் கையின்  ஆரை எலும்பின் மேற்புறமுள்ள  பெரு நாடியை   - மணிக்கட்டிற்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி  முவ்விரலால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும் . அவ்வமயம் நமது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் , நடு விரலில் உணர்வது பித்தம் எனவும் , மோதிர  விரலிளுனர்வது சிலேத்துமம் எனவும் அறியவும் . மற்றும் பூத நாடி பெரு விரல் - சிறு விரலிலும் குரு நாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்தும்  நிற்கும்.   இதில் நாடியின் எண்ணிக்கை, நடை, அழுத்தம், தன்மை,எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும் 


 

செவ்வாய், 20 மார்ச், 2012

விசக்கடியில் உயிர் இருப்பதை அறிவது

விசக்கடியில் உயிர் இருப்பதை அறிவது 

                                 அரவம் முதலிய கொடிய நச்சுயிர்கள்   தீண்டியவன் மயங்கி கிடக்கையில் அவன் உடலில் உயிர் உள்ளதா - இல்லையா என்பதை சில குறிகளால் அறியலாம் . அதாவது விழி மேல் அல்லது கீழ் நோக்கியோ , பக்கத்தில் ஒதுங்கி இருப்பினும் - விரலில் சுடக்கு பரியினும்   - கீறிய இடத்தில் சிவப்பு குருதி வடியினும் - நகக்கண்ணில் உதிரமோடினும் - அடித்த இடம் தடித்து சிவந்து வெதும்பினும் - கொடுத்த மருந்து எதிரேடுப்பினும் - தண்ணீரில்     முங்கினாலும் - எருக்கு அல்லது தைவேளை சாற்றை ஒரு காதில் விட அது மற்றொரு காதில் வராதிருப்பினும் - உடலில் உயிர்   அடங்கி உள்ளது என உணர்ந்து , சிகிச்சை செய்ய உயிர் திரும்பும் ....

                                  ஆயின் மேற்படி குறிகளுக்கு மாறான குறிகளுடன் - விழி நிலைத்து - தாது நின்று , உடல் குளிர்ந்து  பல் கறுத்து இருப்பினும் விஷக்கடியுண்டவன் இறந்து விட்டான் என அறிக ..........

திங்கள், 19 மார்ச், 2012

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

                            தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடியுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம். பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை  உண்ணும்படி கொடுக்க அதன் சுவை மாறி தித்திப்பின்  - நல்லப்பாம்பு , முதலில் இனித்து பின் துவர்த்தால் --மூக்கன்,  மிகவும் புளித்தால்--வழலைசாதி--வளவளுத்து புளித்தால் --கருவழலை -- மயக்கத்துடன் காரமாயிருப்பின் - மயக்கரவு - - நினைத்த சுவை தோன்றின் - புடையன் -- முட்கீரை சுவையிருப்பின் - மண்டலி , - புளித்து பின் காரமாயிருப்பின் - பெரு விரியன் , தலை நடுக்கினால் - விரியன் சாதி -- நா கடுகடுத்தால் - கொம்பேறி மூக்கன் -- , நாவு சுருட்டினால் - சுருட்டை - உள்நாவு சர சரத்தால் சாரை - கண்மறைத்து நெஞ்சடைப்பின் - கல்நெஞ்சன் -- தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின் - சவடி --சுரனயற்று இருப்பின் - இரு தலை மணியன் -- பல் கடுத்தால் - செய்யான் -- சல சலவென மூக்கு எறிந்தால் - எலிச்சாதி  மேல் நாவு நொந்தால்  - நச்செலி - வாந்தியானால் --அரணை- - கண் காது அடைத்தால் - சில்விடம் -- முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும் :: கசந்தால் - ஒருவித நஞ்சுமில்லை  எனவும் உணரலாம் . 

                            ஆடுதீண்டாபாளை - ஆகாசக்கருடன் -- நாகதாளிக்கிழங்கு ஆகியவை இருக்கும் ( வைத்திருக்கும் ) இடங்களில் நச்சுயிரிகள் அண்டாது ..........

ஞாயிறு, 18 மார்ச், 2012

விஷக்கடி வைத்தியரின் திறமை என்ன ?

விஷக்கடி வைத்தியரின் திறமை என்ன ? 

                             நச்சுயிர் கடியினாலும் , விஷ மருந்துகளை உட்கொள்வதாலும் உடலில் ஏற்படும் நச்சு தன்மையை , விஷ முறிவு மருந்துகளாலும் , மாந்திரீகத்தாலும் நீக்கி குணப்படுத்தும் முறைக்கு - விஷ வித்தை அல்லது சாங்கலி எனவும் -- இதில் தேர்ச்சி பெற்றவரை - விஷ வைத்தியர் அல்லது சாங்கலிகன் எனவும் கூறப்படும். பொதுவாக ஒரு விஷ வைத்தியருக்கு பலவித நஞ்சுகளின் குறி குணங்களும் - அவை இன்னதென கண்டறியும் திறனும் - அதனதற்குரிய சிகிச்சை மற்றும் மருந்து முறைகளும் தெரிந்து இருக்க வேண்டும் . சித்த முறையின் படி மருத்துவமும் மாந்திரீகமும் அறிந்திருப்பார் . மேலும் சிலருக்கு தனக்குரிய ஞான திருஷ்டியின் மூலம் நோயுற்றவனின் பெயர் - முகவரி நச்சுயிர் தீண்டிய நேரம் முதலிய தகவல்களை வைத்து அவனை இன்னது தான் தீண்டியுள்ளது என்று கண்டறிந்து  , தனது இருப்பிடத்தில் இருந்தே , வெகு தொலைவில் உள்ள நோயாளியை  நேரில் பார்க்காமலேயே குணப்படுத்திவிடும் சக்த்தியும் சிலருக்கு உண்டு. சிலருக்கு தனக்குரிய மனோசக்தியாலும் , காந்த சக்தியாலும் செயல்பட்டு நச்சு தன்மையை நீக்கி குணப்படுத்த முடியும் . பலரால் அறியப்படாத இம்முறைக்கு மூமியா என்று பெயர் . அருள்வாக்கு பெற்ற சிலரது பெயரை கூறி ஆணையிட்டாலே விஷம் மேலேறாது . பிறகு சிகிச்சைசெய்வதும் உண்டு . பொதுவாக மாந்திரீக முறையின் படி இரகசியமான மந்திர உச்சரிப்புகளினாலும்--உள் வெளி மருந்துகளினாலும் - ஆக இரு வழியிலும் நஞ்சுண்டோரை காக்கும் முறைகள் நமது மருத்துவத்தில் உள்ளன ...

நச்சும் முறிவும் - உடலில் நச்சு தன்மை

உடலில்  நச்சு  தன்மை  எவ்வாறு  விளைகின்றது  . ?

                   சகல மருந்து பொருட்களையும் கையாளுகையில் , கையாளுமுன் அதனதற்குரிய சுத்தி முறைகளை முறைப்படி செய்யாததாலும் - மருந்துகளை பக்குவப்படி முடிக்காததாலும் - மருந்துகளை மருத்துவர் குறிப்பிட்ட அளவை மீறி உண்பதாலும் - அனுபானம் மற்றும் பத்தியமின்றி உண்பதாலும் உடலில் நச்சு தன்மை ஏற்படுகின்றது . மேலும் கொலைக்கோ , தற்கொலைக்கோ நஞ்சுகளை வழங்குதல் , - கருச்சிதைவுக்கென அகக்கருவியிலும் , புறவுருப்புகளிலும் சில பொருட்களை செலுத்துவதாலும் - பிறரை  தன் வழி திருப்ப  இடுமருந்தை இடுதல் - நஞ்சை ஒழிக்க நஞ்சுப்பொருள் வேண்டாமிடத்து அப்பொருளை வழங்குதல் - நச்சுயிர்கள் தீண்டுதல் ஆகிய சில காரணங்களினாலும் உடலில் விஷத்தினால் ஆன தீங்குகள் விளையும் ...

                             பல்வேறு வகையான நச்சுக்களையும் அவற்றை நீக்குவதற்கான சிகிச்சை முறையை பற்றியும் இனி வரும் இடுகைகளில் காணலாம்

வியாழன், 15 மார்ச், 2012

பத்தியம் - 3

அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

                          அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம்   , பழம் புளி , நெல்லிக்காய் , பனங்கற்கண்டு  ,  கெளுத்திகருவாடு , பாசிப்பயறு , குரவை கருவாடு , வெள்ளாட்டு உப்பக்கண்டம் , காடை , வெள்ளெலி , ஊர்க்குருவி , உடும்பு , அத்திபிஞ்சு , வாழைக்கச்சல், நீர்மோர் , வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம் , . ஆயின் , மாங்காய்   , தேங்காய் , இலுப்பெண்ணை , நல்லெண்ணெய் , சோற்றாவி   , நெல்லாவி , கொட்டைமுத்தாவி , தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை ,  கடுப்பு , கைகால் முடக்கம்  ஆகியன விளையும். 

 இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன . பால் , இளநீர் , எண்ணெய் , போகம் , குளிர்ந்தாறிய சோறு , மிகு நடை , தயிர் , புளிப்பு , மிகு வேலை , இனிப்பு பாகு , பச்சை மீன் . இறைச்சி , கோழி , பழங்கறி , தேங்காய் , மாங்காய் ,நெய் , பருப்பு ,   முட்டை , புனுகு , சந்தனம் , தோசை , பிட்டு , பணியாரம் , பயறு , அவல் , பொரி , உறக்கம் , மஞ்சள் வாடை , பழங்கஞ்சி , மிகு தூக்கம் , ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது . ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும்  , அது மீறினால் மரணமும் விளையும். .

ஞாயிறு, 11 மார்ச், 2012

பத்தியம் என்றால் என்ன ? 2

பத்தியம் என்றால் என்ன ?

                     கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

                     கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு , புளி நீக்கி உண்ணல் வேண்டும் . மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும் , சுட்ட புளியும் கூட்டி நெய் , சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் . . மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும் . இதில் முறை தவறினால் கை , கால் முதலியன வீங்கும் .

                      பத்தியத்திற்கு ஏற்ற  உணவுப்பொருட்களாவன :-


                      கட்டிய உப்பு , ஆமை , புளியாரை , சீயக்கொளுந்து , நெல்லி , அரு நெல்லி , வெள்ளாடு , முயல் , ஊர்க்குருவி , காடை , மான் , மரை , சுறாமீன் , மயரை , குரவை , வரால் , தேளி , மிளகு , சர்க்கரை , தேன் , சிறுகீரை , ஆவின் பால் , நெய் , சிறுபயறு , பொன்னாங்கண்ணி , துவரை , அவரை பிஞ்சு , புடலம் பிஞ்சு , கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு ,  முருங்கை பிஞ்சு , பரட்டை கீரை , முள்ளி பிஞ்சு , தூதுளை சமூலம் , கண்டங்கத்திரி பிஞ்சு , ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது ......

பத்தியம் என்றால் என்ன ? - 1

பத்தியம் என்றால் என்ன ?

                          சித்த மருத்துவ முறையிலும் மற்றும் ஏனைய மருத்துவ முறையிலும் பத்தியம்  இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . ஆனால் என்ன பத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . அது இது என்று ஏக மழுப்பு மழுப்புவார்கள் . இதோ இங்கு பத்தியத்திற்கான சில முறைகள் விளக்கப்படுகின்றது .

பொதுவான பத்திய விதிமுறை என்பது என்ன ?

                        பொதுவாக வாயு - வயிற்று கோளாறுகளுக்கு  - உருளைக்கிழங்கு , வாழைக்காய் , மொச்சை - அவரை வகை - உளுந்து - கத்திரி - மாவுப்பண்டங்கள் - கோசு - செவ்வாட்டு மாமிசம் - சேவல் கறி - முட்டை முதலிய வாயுப்போருட்களை நீக்க வேண்டும் .

                        குருதி - சீதக் கழிச்சல் முதலியவற்றிற்கு - மிளகாய் - மீன் - கோழி - உப்பு - கடின உணவு - முதலிய மிகு காரமான , உஷ்ணமான பொருட்களையும் நீக்க வேண்டும் .

                       சரும நோய்களுக்கு - மீன் - கருவாடு - பயறு வகை - கத்தரி - சோளம் -செம்மறியாட்டுக்கறி -  சேவல் மாமிசம் - கம்பு முதலிய கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் . 

                       சோகை - காமாலை - பாண்டு - பெரு வயிறு முதலியவற்றிற்கு - உப்பு - கடுகு - நல்லெண்ணை - மாமிசம் - புளி - மது வகை - கிழங்கு - காய் - பயறு - முதலிய வாயு - கரப்பான் பொருட்களை நீக்க வேண்டும் . 

                       மூலம் - பௌத்திரம் முதலியவற்றிற்கு - மிளகாய் - புளி - கடுகு - நல்லெண்ணை - மது வகை - கேப்பை - அலைச்சல் - தூக்கம் முதலிய உஷ்ணமானவற்றையும்  முறையே நீக்க வேண்டும் . 

                      பொதுவாக எப்பிணிக்கும் மிகுவேலை -   அலைச்சல் - புளி - புகை - மது - இராவிழித்தல் - மனக் கவலை - அதிக சிந்தனை - பகலுறக்கம் - மந்த குணப்பொருட்கள் - ஆகியவற்றை நீக்க வேண்டும் . 

                      பத்தியம் வைப்பதும் - நீக்குவதும்  பண்டிதற்கு அழகு
                       

சனி, 10 மார்ச், 2012

கொலையிச்சை கிரகம்

கொலையிச்சை கிரகம் என்றால் என்ன ? 

                              கொலையிச்சை கிரக நோய் என்றால் ஒரு வித துர்க்கிரக பாதிப்பினால் ஏற்ப்படும். இதனால் உடல் மெலிந்து துர்நாற்றம் வீசுதல் , தோற்றம் மாறி முகம் விகாரம் அடைதல் , நாவைக்கடித்தல் , கண்ணீர் சொரிதல் , மூக்கு வரளல் , வெறித்த பார்வை , நாவரண்டு தாகித்தல் , துர்நாற்றமுள்ள வாந்தி,  நவ துவாரத்திலும் குருதி இழிதல் , வயிறு காந்தி எரிதல் , நினைவு மாறல் போன்றவை காணும்.  மேலும் பொறுப்பற்ற தீய செயலையும் செய்வர் . அவை - மழைநீரை பிசைதல் , மார்பில் அடித்து கொள்ளுதல் , எதிரில் வருவோரைத் திட்டி தீர்த்தல் , பிறரை ஆயுதம் தடி முதலியனக் கொண்டு எரிந்து தாக்குதல் , குளம் , கிணறுகளில் விழுந்து சாக முயலுதல் முதலியனவாகும். இதற்க்கு வெறி நோய் மருந்துகளுடன் கிரக சாந்தி வழிபாடும் தேவை ..

நரம்பு சூலை என்றால் என்ன ?

நரம்பு சூலை என்றால் என்ன ?

நரம்புகளில் ஏற்படும் வாத வலியே நரம்புக்குத்து அல்லது நரம்பு வாதம் எனப்படும். இதை நரம்பு சூலை என்றும் கூறுவார்கள் . நரம்பிலும் அல்லது நரம்பு செல்லும் வழியிலும் காணும் இது நீரிழிவு, நச்சுக்கள் , சூலை , முறை சுரம் , குளிர்சுரம் , கபநோய், இவற்றின் பாதிப்புகளாலும் , வாதம் சினமுருவதாலும் ஏற்படும் . இது காணும் - மார்பு - பிடரி - தலை - முகம் - கை கால் முதலிய இடங்களுக்கேற்ப இது பலவகையாக கூறப்படும் . இதில் காணும் வலியானது " விண் விண் " என்று தெரிக்கக்கூடிய அளவு மிகவும் கொடுமயானதாகவும் , பதைத்து துடிப்பதாகவும் தோலில் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும். நரம்பு சூலையும் - கீல் வாதமும் வெவ்வேரானதாகும் . கீல் வாதம் பல மூட்டுக்கள் , கணுக்களில் காண்பதோடு ஓடித்திரியும் இயல்புடையதாகும் . நரம்பு வாதம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும். இதற்க்கு வாத சூலைக்குரிய மருந்துகளை பயன்படுத்துவது நலம் பயக்கும் ....